முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-11-09 18:44 GMT
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கந்தசஷ்டி விழா 

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பகல் மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா, தீபாராதனை நடைபெற்றது. 

6-ம் திருநாளான நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி ஆய்க்குடி சிவன் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மகாசூரன், சிங்கமுகசூரன், ஆனைமுகசூரன் ஆகிய 3 அசுரர்களை முருகபெருமான் வதம் செய்தார்.  
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வென்னிமலை முருகன் கோவில்

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது.

பின்னர் மாலை 6 மணிக்கு சூரனை சுவாமி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு மகா பூர்ணாஹூதி, கும்ப அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (புதன்கிழமை) இரவு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 

திருமலைக்குமாரசுவாமி கோவில்

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை மலைக்கோவிலில் திருமலை குமரன் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்