விடிய விடிய சாரல் மழை; நெற்பயிர் சேதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்தது. தொடர் மழையால் நெற்பயிர் சேதமானது.

Update: 2021-11-09 18:35 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்தது. தொடர் மழையால் நெற்பயிர் சேதமானது
.
விடிய விடிய மழை

வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் இடைவிடாது சாரல் மழை பெய்தது.
இதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் எங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட புறநகர் பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததாலும் தண்ணீர் செல்ல வழி இல்லாததாலும் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. எங்கு பார்த்தாலும் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி குளம்போல நிற்கிறது. 

பள்ளிகளுக்கு விடுமுறை

மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழை நேற்றும் நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக நேற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. முன்கூட்டியே விடுமுறை அறிவித்ததால் மாணவ- மாணவிகள் மட்டுமல்லாது பெற்றோர்களும் நிம்மதிஅடைந்தனர்.
கண்மாய்கள் நிரம்புகின்றன
திருவாடானை தாலுகாவில் பொதுப்பணித்துறையின் கீழ் 96 கண்மாய்களும், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 222 கண்மாய்களும் சுமார் 60-க்கும் மேற்பட்ட முன்னாள் ஜமீன் கண்மாய்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழையால் 50 சதவீத கண்மாய்கள் முழுமையாக நிரம்பி உள்ளன.
.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சோழகன் பேட்டை, சேனவயல், அஞ்சுகோட்டை, என்.எம்.மங்கலம், குஞ்சங்குளம், பதனக்குடி, சிறுகம்பையூர், பாண்டுகுடி உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்பி உபரிநீர் செல்கிறது. இந்த தாலுகாவில் 80 சதவீதம் ஊருணிகள் நிரம்பி உள்ளன.
கண்மாய்களின் கரைகள் பலமாக பாதுகாப்பாக இருக்கிறதா? என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, சேவுகப்பெருமாள், ஒன்றிய பொறியாளர் பாலக்குமார் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர், செயலாளர் மற்றும் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள் முத்தமிழ் அரசன், மகேந்திரபாண்டியன், முகமது யாசர் தலைமையில் அலுவலர்கள் கண்மாய்களை ஆய்வு செய்தனர்.

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு சுமார் 26 ஆயிரத்து 650 எக்டேர் நிலப்பரப்பில் நெல்சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால்  டி.கிளியூர், கோடனூர், சிறுமலைக்கோட்டை வருவாய் கிராம பகுதிகளில் ஏராளமான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதை பார்த்த விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களை வேளாண்மை துறை துணை இயக்குனர் சேக் அப்துல்லா தலைமையில் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன், உதவி வேளாண்மை இயக்குனர் ராஜலெட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் மெய்யப்பன், கேசவன், கிராம நிர்வாக அலுவலர்கள் கனகராஜ், பழனிக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

மழைஅளவு

மாவட்டத்தில் நேற்று காலையுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- 
ராமநாதபுரம்-7, மண்டபம்-13.3, ராமேசுவரம்-30.5, பாம்பன்-12.4, தங்கச்சிமடம்-10.2, பள்ளமோர்குளம்-11, திருவாடானை-3.3, தீர்த்தாண்டதானம்-6.8, தொண்டி-2.8, வட்டாணம்-4.6, ஆர்.எஸ்.மங்கலம்-2.5, பரமக்குடி-5.4, முதுகுளத்தூர்-22.2, கமுதி-27.6, கடலாடி-19.2, வாலிநோக்கம்-32, மொத்தம்-210.8, சராசரி-13.18.

மேலும் செய்திகள்