நெல்லை கோவில்களில் சூரசம்ஹாரம்
நெல்லை கோவில்களில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை கோவில்களில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கந்தசஷ்டி விழா
நெல்லையில் உள்ள முருகன் கோவில்களில் கடந்த 4-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவிலில் மாலை 4.30 மணிக்கு சுவாமி சுப்பிரமணியர் வெள்ளி குதிரை வாகனத்திலும், ஆறுமுக நயினார் சப்பரத்திலும் புறப்பட்டனர். 5 மணிக்கு சந்திப்பிள்ளையார் கோவில் முன்பு வேணுவன குமாரர், கோவிலில் இருந்து வேல் எடுத்து வந்து ஆறுமுக நயினார் மற்றும் சுப்பிரமணியர் முன்பு சேர்ந்தார்.
பின்னர் ரதவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை) காலை காந்திமதி அம்மாள் சன்னதியில் வைத்து சுப்பிரமணியர்-தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவில் ஆறுமுக நயினார் சன்னதியில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.
குறுக்குத்துறை
தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலில் உற்சவர் சிலை, மேலக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. அங்கும் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது.
இதேபோல் சந்திப்பு சாலைக்குமார சுவாமி கோவில், வண்ணார்பேட்டை குட்டத்துறை முருகன் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் சுப்பிரமணியர் சன்னதி, மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில், தச்சநல்லூர் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் முருகன் சன்னதி, குறிச்சி சொக்கநாதர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
களக்காடு-அம்பை
களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று சூரசம்ஹார விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கமாக கோவில் வடபுறமுள்ள திடலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்படும். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவில் முன் வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அம்பை காசிநாதசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் கோவிலின் வளாகத்திலேயே சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இதேபோல் அம்பை மேலப்பாளையம் தெருவில் உள்ள திருமூலநாத சுவாமி கோவில் மற்றும் அகஸ்தீஸ்வரர் கோவில், அம்பை அருகே வாகைக்குளம் பஸ்நிலையம் அருகில் உள்ள பாலசுப்பிரமணிய கோவில் மற்றும் கல்லிடைக்குறிச்சி பகுதிகளிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.