மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நெமிலி அருகே மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
காவேரிப்பாக்கம்
நெமிலி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நெமிலி அடுத்த அவளூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மழையால் சேதமடைந்த நெற் பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும் விவசாய பயிர்கள் குறித்து தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கண்காணித்து அறிக்கை தயார் செய்து அளிக்க வேண்டும்,
பயிர் காப்பீடு செய்யப்பட்ட விவரங்களையும் விவசாயிகளிடமிருந்து பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கோவிந்தவாடி ஏரிக்கு அணைக்கட்டில் இருந்து கால்வாயில் செல்லும் தண்ணீரை பார்வையிட்டு தண்ணீர் செல்லும் ஏரிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் சிவதாசு, தாசில்தார் ரவி, நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.