முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்தமழை வரும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஆய்வு செய்தார். .
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்தமழை வரும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து திருவண்ணாமலையில் வேங்கிக்கால் ஏரி முதல் கீழ்நாத்தூரி ஏரி வரை வடிகால்வாய் வழியாக நீர் செல்லும் பாதையினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டேன். மீண்டும் இன்று ஒவ்வொரு துறை வாரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி 95 சதவீதம் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் மட்டும் பைப் கல்வெட்டு, பாக்ஸ் கல்வெட்டுகளை பெரிதாக்கவும், ஏரி வடிகால்வாய்களை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வேங்கிக்கால் ஏரியிலிருந்து, சேரியந்தல் ஏரி, நொச்சிமலை ஏரி, கீழ்நாத்தூர் ஏரிக்கு செல்லும் கால்வாய்களை சரி செய்தால் தான் பலத்த மழை வரும் போதும் திருவண்ணாமலையில் உள்ள கிராமங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.
முன்னேற்பாடு பணிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 மணிநேரத்திற்குள் 10 சென்டி மீட்டருக்கு மேல் கனமழை வரும் போதும் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து எந்தவித பாதிப்பும் மாவட்டத்தில் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சேத்துப்பட்டு தாலுகா நரசிங்கபுரம் கிராமத்தில் மழையின் காரணமாக சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்தார்.
பின்னர் மழையினால் பாதிக்கப்பட்டு கல்வி நிதி உதவி பிரிவு, புனித தோமையர் மருத்துவமனை மற்றும் தொழு நோய் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்ட பொறியாளர் முரளி, வேளாண்மை இணை இயக்குனர் முருகன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.