காலிங்கராயன் தடுப்பணை நிரம்பி வழிந்தது

பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் காலிங்கராயன் தடுப்பணை நிரம்பி வழிந்தது

Update: 2021-11-09 16:55 GMT
வடகிழக்கு பருவ மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையான பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடிக்கும் மேற்பட்ட அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் தடுப்பணை நிறைந்து தண்ணீர் ெசல்கிறது. அவ்வாறு செல்லும் தண்ணீரானது பவானியில் உள்ள கூடுதுறையில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. மேலும் காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 400 கன அடியாக குறைத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை ஏதும் பெய்யவில்லை என்றாலும் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இதனால் பகல் நேரங்களிலும் குளிர் காற்று வீசியது. மேலும் இரவு நேரங்களில் கடுங்குளிர் அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை 7 மணி வரை பனி மூட்டம் இருந்ததால் வாகனங்களில் செல்வோர் தங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். 

மேலும் செய்திகள்