மயங்கி விழுந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி சாவு

மயங்கி விழுந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி சாவு

Update: 2021-11-09 14:23 GMT
இடிகரை

பெரியநாயக்கன்பாளையம் அருகே மயங்கி விழுந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி இறந்தது. 

காட்டு யானை விழுந்தது

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் சி.ஆர்.பி. எப் பயிற்சி கல்லூரியில் சிறிய பள்ளத்திற்குள் கடந்த 6-ந் தேதி 7 வயதான குட்டி ஆண் யானை ஒன்று வழுக்கி விழுந்தது. 

இதை அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமை யில் வனத்துறையினர் விரைந்து சென்று பள்ளத்தை சீரமைத்தனர்.

இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், கோவனூர் கால்நடை உதவி மருத்துவர் வெற்றிவேல் ஆகியோர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். 

அதன்பிறகு யானை தானாக எழுந்து புதர்ப்பகுதிக்குள் சென்றது. இதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். 

வனத்துறை டாக்டர்கள் 

இந்த நிலையில் அந்த யானை நேற்று முன்தினம் காலை பூச்சியூரில் கிரீன் கார்டன் அருகே வனப்பகுதியை விட்டு சுமார் 250 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா நிலத்திற்குள் வந்தது.

 அங்கு அந்த யானையின் உடல் நிலை மோசமானதால் மயங்கி விழுந்தது.

உடனே முதுமலை வனக் கால்நடை மருத்துவர்கள் வந்து அந்த யானைக்கு நேற்று அதிகாலை வரை தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். 

இதை கோவை மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார், மாவட்ட வன விரிவாக்க அலுவலர் தினேஷ் குமார் ஆகியோர் பார்வையிட்டனர். 

சிகிச்சை பலனின்றி சாவு

அந்த யானைக்கு 50 பாட்டில் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. வாழைப்பழம் உள்ளிட்ட பழவகைகளும் யானைக்கு உணவாக கொடுக்கப்பட்டது. 
ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த ஆண் யானை பரிதாபமாக இறந்தது.

 இதையடுத்து வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள் முன்னி லையில் கால்நடை மருத்துவர்கள் யானையை உடற்கூறாய்வு செய்த னர். 

இதில், நீர் சத்துக்குறைபாடு, கல்லீரல் பிரச்சினை காரணமாக அந்த யானை இறந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்