சென்னையில் மாநகராட்சி சார்பில் 169 நிவாரண முகாம்கள் ஏற்பாடு
சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க 169 நிவாரண முகாம்களை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
169 நிவாரண முகாம்
சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், சுரங்கப்பாதைகளில் பெரும் அளவு மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக மாநகரின் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியினர் தங்களது வீடுகளை காலி செய்யும் சூழல் ஏற்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் வசிப்பவர்கள் தங்குவதற்கு ஏதுவாக மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள், கோவில்கள் என 169 இடங்களில் நிவாரண முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மழைநீர் புகுந்த இடங்களில் உள்ள பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் உதவியுடன் மீட்கப்பட்டு இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ குழு
அந்த வகையில் நேற்று காலை நிலவரப்படி 889 பேர் மாநகராட்சியின் இந்த 169 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது கொரோனா மற்றும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களிடம் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து முகாம்களிலும் டாக்டர், செவிலியர் அடங்கிய மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டு அங்குள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளனவா? என இந்த மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு, அறிகுறிகள் உள்ளவர்களுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாம்களில் இருக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் 3 வேளையும் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு வழங்க நடவடிக்கை
மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களுக்கு காலையில் பொங்கல், ரவா கிச்சிடி உள்ளிட்டவைகள் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. நேற்று மதியம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளில் இருந்த 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் உள்பட 3 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு சாம்பார் சாதம், புளி மற்றும் எழுமிச்சை சாதம், பிரிஞ்சு ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் வழங்கினர்.
200 பொறுப்பு அதிகாரிகள்
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான உணவு வழங்க 200 பொறுப்பு அதிகாரிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பபட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவை வழங்க வருவாய்த்துறையின் சார்பில் வரி வசூலிப்பவர் அல்லது உரிம ஆய்வாளர் 200 பேர் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கும் அளவுக்கு உணவு சமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.