உடைந்த பாதாள சாக்கடை மூடிகள் அகற்றம்: ஈ.வி.கே.சம்பத் சாலையில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்
ஈ.வி.கே.சம்பத் சாலையில் மழைநீர் அகற்றும் பணியில் சென்னை குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. உடைந்த பாதாள சாக்கடை மூடிகளை அப்புறப்படுத்தி விட்டு புதிய மூடிகளை போட்டு ஆபத்துகளை தடுத்தனர்.
சென்னை,
வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னையில் மாநகர பகுதியில் குறிப்பாக ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி சாலை, சைனஸ் சாலை, லெட்டங்ஸ் சாலை, ரித்தட்டன் சாலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் இதுகுறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்துக்கு புகார் தெரிவித்தனர். உடனடியாக பகுதி-5, 58-வது அலுவலக உதவி பொறியாளர் பாண்டியன் தலைமையில் பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று மழைநீர் தடைகளை அகற்றி நீர் வடிந்து செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.
அதேபோல், சாலை ஓரத்தில் உள்ள நடைபாதைகளில் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டன. பொதுமக்கள் அறியாமல் தவறி விழுந்துவிட வாய்ப்பு இருப்பதால், உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி விட்டு புதிய மூடிகளை போட்டு ஆபத்துகளை தடுத்தனர். தொடர்ந்து இந்த பகுதிகளை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்துக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பதுடன், சாலையில் மழைநீர் தேங்காமல் தொடர்ந்து பணியாற்றவும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.