அரசு பள்ளி கட்டுமான பணிகளை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை

அரசு பள்ளி கட்டுமான பணிகளை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை

Update: 2021-11-08 19:46 GMT
சேலம், நவ.9-
காடையாம்பட்டி அருகே ஆதி திராவிடர் பள்ளி கட்டுமான பணிகளை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் மனு
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தாத்தியம்பட்டி ஊராட்சி ஆதி திராவிடர் தெருவில் வசிக்கும் ஊர் பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கார்மேகத்திடம் ஒரு புகார் மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தாத்தியம்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளியானது கடந்த 2017-18-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் 6,7,8-ம் வகுப்புகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு தற்போதுள்ள பள்ளி வளாகத்திலேயும், ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள அரசு புறம்போக்கு நிலத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கட்டுமான பணிகள்
ஆனால் புறம்போக்கு நிலத்தின் அருகில் பாப்பான்குட்டை ஓடை இருப்பதால் அதில் செல்லும் தண்ணீர் சரபங்கா ஆற்றில் கலக்கிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தோம். எனவே எங்களது வேண்டுகோளின்படி பள்ளி வளாகத்திலேயே 2 மாடி கூடுதல் வகுப்பறைகள் கட்டிடங்கள் கட்டுவதற்கு தாங்கள் அனுமதி அளித்தீர்கள்.
அதன்படி பள்ளியில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஆனால் எங்கள் ஊரை சேர்ந்த சிலர் கடந்த மாதம் 31-ந் தேதி பள்ளிக்குள் புகுந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என்று தடுத்து நிறுத்தி விட்டனர். அவர்கள் சொல்லும் இடத்தில் தான் பள்ளி கட்டிடத்தை கட்ட வேண்டும் என்றும், அதையும் மீறி கட்டினால் கொலை செய்துவிடுவதாகவும் தெரிவிக்கிறார்கள். எனவே அரசு பள்ளி கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்