இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சுத்தமல்லியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேட்டை:
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி சம்சு நகரைச் சேர்ந்தவர் சிவராமன் (வயது 28). இவர் தனியார் கார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த சிவசங்கரி (24). இவர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். வழக்கம் போல காலையில் சிவராமன் வேலைக்கு சென்ற பிறகு சிவசங்கரி வீட்டில் உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார்.
நீண்ட நேரம் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மாமியார் பூமாரி, ஜன்னல் வழியாக பார்த்தபோது மின் விசிறியில் சேலையால் சிவசங்கரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் திரேசா சம்பவ இடத்திற்கு சென்றார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவசங்கரிக்கு திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.