நாட்டு வெடிகுண்டுகளுடன் சகோதரர்கள் 3 பேர் கைது
ராமநாதபுரத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று மாலை பாரதிநகர் பகுதியில் குற்றத்தடுப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மொபட்டில் வந்தனர். அவர்களை மடக்கி நிறுத்த முயன்றபோது நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.
அப்போது அவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் நாகநாதபுரம் புதுத்தெரு பகுதியில் உள்ள வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர். இதனால் அவர்களின் வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நாகநாதபுரம் புதுத்தெருவை சேர்ந்த முகம்மது மீராசா மகன்கள் நியாஸ்கான் (வயது40), முகம்மது ரிபாயுன் (38), முகம்மது ஜகாங்கீர் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் நியாஸ்கான் பெங்களுருவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
ஜகாங்கீர் சென்னை மண்ணடி பகுதியில் பழச்சாறுகடை நடத்தி வருகிறார். ரிபாயுன் ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள வணிக வளாகத்தில் கடை நடத்தி வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நேரில் வந்து 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். ராமநாதபுரத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் சகோதரர்கள் 3 பேர் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு நாட்டு வெடிகுண்டு கிடைத்தது எப்படி, எதற்காக வைத்து இருந்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.