இலுப்பூரில் தொடர் மழையால் பழமையான அந்தோணியார் ஆலயம் இடிந்து விழுந்தது விராலிமலையில் விவசாய கிணறு சேதம்; 2 மாடுகள் செத்தன

இலூப்பூரில் தொடர் மழையால் பழமையான அந்தோணியார் ஆலயம் இடிந்து விழுந்தது. விராலிமலையில் பெய்த கனமழையால் விவசாய கிணறு சேதமடைந்தது. மேலும் 2 மாடுகள் செத்தன.

Update: 2021-11-08 18:20 GMT
அன்னவாசல்:
ஆலயம் இடிந்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே வெளுத்து வாங்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இலுப்பூர் அருகே சத்தியநாதபுரம் பகுதியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் தொடர் மழையினால் இடிந்து விழுந்தது. 
இதேபோல் அன்னவாசல் ஒன்றியம் இலுப்பூர் அருகே உள்ள சத்தியநாதபுரத்தில் இருந்த 300 ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தொடர் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சுற்று சுவர் உள்பட கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தது.
2 பசுமாடுகள் செத்தன
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் தொடர் மழையால் ஒரு சில இடங்களில் சாலைகள் சேதடைந்தும், வீடுகள் இடிந்தும் கால்நடைகள் செத்தும் வருகின்றன. இதேபோல் விராலிமலை அருகே உள்ள கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு தொடர் மழையினால் கிணற்றின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்து முழுமையாக சேதமடைந்தது.
இதேபோல் கொடும்பாளூர் கீழப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவரது ஒரு செம்மறி ஆடு தொடர் மழையால் செத்தது. மேலும் வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகப்பன் என்பவரது பசுமாடு மேய்ச்சலுக்கு சென்றபோது அங்குள்ள தென்னங்குடி குளத்தில் விழுந்து இறந்தது.
கணபதி குளம் நிரம்பியது
ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் பெரிய கணபதிகுளம் மூலம் 200 ஏக்கருக்கு பாசன வசதி பெருகிறது. இந்த குளம் தற்போது பெய்து வரும் தொடர் மழையில் நிரம்பிள்ளது.

மேலும் செய்திகள்