ஆபத்தை உணராமல் ஓடையை கடக்கும் விவசாயிகள்
விருத்தாசலம் அருகே ஆபத்தை உணராமல் ஓடையை விவசாயிகள் கடந்து செல்கின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள க.இளமங்கலம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் சாலையின் இடையே ஓடை செல்கிறது. இந்த ஓடையை கடந்து தான் அப்பகுதி விவசாயிகள் தங்களது விளை நிலத்துக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் விவசாய நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த தண்ணீரை வடிய வைப்பதற்காகவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் விவசாயிகள் ஆபத்தை உணராமல் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஓடையை கடந்து விவசாய நிலங்களுக்கு செல்கின்றனர். நீச்சல் தெரியாதவர்களை பிளாஸ்டிக் டேங்கில் அமர வைத்து தண்ணீரில் அழைத்து செல்கின்றனர். இது தவிர சாப்பாடு, குடிநீர், மாடுகளுக்கு தீவனம், உர மூட்டைகள் உள்ளிட்டவைகளையும் அந்த பிளாஸ்டிக் டேங்க் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி பலர் இறந்து வரும் நிலையில் விவசாயிகள், இதுபோன்று ஆபத்தை உணராமல் ஓடையை கடந்து செல்வது கவலை அளிப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.