கடலூருக்கு, 70 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் வருகை
பேரிடர் மீட்பு பணிகளுக்காக சென்னையில் இருந்து 70 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் வந்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. அனைத்து பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளிலும் தண்ணீர் அளவுக்கு அதிகமாக செல்கிறது.
70 பேர் கொண்ட குழுவினர் வருகை
இருப்பினும் ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இருந்தாலும் பேரிடர் மீட்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசார் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் பேரிடர் மீட்பு பணிகளுக்காக சென்னை ஆவடியில் இருந்து தமிழ்நாடு இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி முன்னிலையில் 70 பேர் கொண்ட குழுவினர் மீட்பு உபகரணங்களுடன் நேற்று கடலூர் வந்தனர். அவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனை சந்தித்து, தாங்கள் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்து விவாதித்தனர்.
தொடர்ந்து அவர்கள் காவலர் பயிற்சி அலுவலகத்தில் தங்கினர். பின்னர் அவர்கள் மாலையில் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.