பாலியல் தொல்லை வழக்கு: கணவருடன் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி 11-ந்தேதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு சிறப்பு டி.ஜி.பி.யிடம் குற்றச்சாட்டுகள் பதிவு
பாலியல் வழக்கில் சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் எஸ்.பி. ஆகியோரிடம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, அவரது கணவர் வருகிற 11-ந் தேதி நேரில் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம்,
பாலியல் புகார்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் நேரில் ஆஜராகினர்.
குற்றச்சாட்டுகள் பதிவு
இதனையடுத்து அவர்கள் இருவரின் மீதும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் படித்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இருவரிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு அவர்கள் அளித்த பதில்களை நீதிபதி கோபிநாதன் பதிவு செய்துகொண்டார்.
அதன் பின்னர் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, இவ்வழக்கில் 354 ஏ சட்டப்பிரிவு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் (4 ஆப்) சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் 354 ஏ வந்தால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் (4 ஆப்) வராது, குறிப்பாக இந்த சட்டம் பொது இடத்தில் நடந்தால் மட்டுமே பொருந்தும் எனவும், தனி இடத்தில் நடந்தால் அந்த சட்டப்பிரிவு பொருந்தாது என்பதால் அதை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.
11-ந் தேதி சாட்சிகள் விசாரணை
அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், இவ்வழக்கில் 127 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சஸ்பெண்டு உத்தரவு வழங்கிய மாநில உள்துறை செயலாளரிடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் கலாவதி, கடும் ஆட்சேபனை தெரிவித்ததோடு, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடமே முதலில் விசாரணையை நடத்த வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வைத்த கோரிக்கையை நிராகரித்ததோடு புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் அவரது கணவரிடம் முதலில் விசாரணை நடத்தப்படும் என்றார்.
அதன் பின்னர் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான வக்கீல், தற்போது தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கும்படி வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு வக்கீல் கடும் ஆட்சேபனை செய்தார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், சாட்சிகள் விசாரணை வருகிற 11-ந் தேதியன்று (வியாழக்கிழமை) தொடங்கும் என்றும், அன்றைய தினம் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் 2-வது சாட்சியான அவரது கணவர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.