செம்பனார்கோவில் அருகே கோவில் அறங்காவலர் மர்ம சாவு போலீசார் விசாரணை
செம்பனார்கோவில் அருகே கோவில் அறங்காவலர் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொறையாறு:-
செம்பனார்கோவில் அருகே கோவில் அறங்காவலர் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில் அறங்காவலர்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே தலைச்சங்காடு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நாண்மதியப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநாங்கூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த திருவேங்கடம் (வயது78) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக அறங்காவலராக இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு நடை திறப்பதற்கு முன்பாக கோவில் அருகே 3 பேர் பஜனை பாடி உள்ளனர். அவர்களிடம் கோவில் நடை திறக்காமல் பஜனை பாடக்கூடாது என்று அறங்காவலர் திருவேங்கடம் கூறி உள்ளார்.
இதன் காரணமாக அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் திருவேங்கடத்தை காணவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கோவில் குளத்தில் திருவேங்கடம் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார்.
போலீசார் விசாரணை
இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் மற்றும் போலீசார் அங்கு சென்று திருவேங்கடத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் அறங்காவலர் மர்மமான முறையில் இறந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.