குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலைமறியல்

தரகம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-11-08 16:49 GMT
கரூர்
தரகம்பட்டி
சாலை மறியல்
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மாவத்தூர் ஊராட்சி, தரகம்பட்டி அருகே களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 40 நாட்களாக காவிரி கூட்டு குடிநீரும், 10 நாட்களாக பஞ்சாயத்து குடிநீரும் வரவில்லை. இதுகுறித்து பல முறை ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இதனால் ஆத்திரம் அடைந்த களுத்தரிக்கப்பட்டி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று காலை கரூர்-மணப்பாறை மெயின் ரோட்டில் களுத்தரிக்கப்பட்டி பிரிவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி, பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன், ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வசதி உடனடியாக செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்