தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் சாலை துண்டானது
தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் சாலை துண்டானது
கோவை
கோவையில் தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் சாலை துண்டானது. அந்த வழியாக காரில் சென்ற கணவன்- மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவையில் மழை
வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை பாப்பநாயக்கன்பாளையம், கணபதி, ரெயில் நிலையம், காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, சேரன்மாநகர், சரவணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
இதனால் திருச்சி சாலை, அவினாசி சாலை, சத்தி சாலை, ரெயில் நிலைய சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அவினாசி சாலை மேம்பால சுரங்க பாதையில் நேற்று நள்ளிரவில் அதிக அளவு தண்ணீர் தேங்கி ரெயில் தண்டவாளத்தை மூழ்கடித்தது.
மரங்கள் முறிந்து விழுந்தன
இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட் டது. அங்கு தடுப்புகள் வைத்து பாதை அடைக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.
லங்கா கார்னர், வடகோவை ரெயில்வே மேம்பால பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். எனவே அங்கு. தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பலத்த காற்றுடன் பெய்த மழையால் கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையம் போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீஸ் சமுதாய கூடம் அருகே நின்ற 2 மரங்கள் முறிந்து தடுப்புச்சுவரை தாண்டி சாலையில் விழுந்தன. அது அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கார் சேதம்
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உத்தர வின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். கோவை திருச்சி ரோட்டில் கார் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் கார் சேதம் அடைந்தது.
அப்போது நல்லவேளையாக காருக்குள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மரக்கடை பகுதியில் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இது போல் சாய்பாபா காலனி பகுதியில் 2 சிறிய வீடுகள் இடிந்து விழுந்தன.
ஆனைக்கட்டியில் இருந்து தடாகம் செல்லும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பன்னிமடை, தென்றல்நகர், ரோஸ்கார்டன், சஞ்சீவி நகர், முத்துநகர் நரிக்குறவர்கள் காலனி, அப்பநாய்க்கன்பாளையம் கலைஞர்நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது
கோவையை அடுத்த இடிகரை பேரூராட்சி மணியகாரம்பாளையம் அருகே ஜெம் கார்டன் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. மணியகாரம்பாளையம்- ஜெம் கார்டன் செல்லும் தார்சாலையின் குறுக்கே ஓடை செல்கிறது.
அதில் தண்ணீர் செல்வதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டு தரைப்பாலம் போடப்பட்டு உள்ளது. அதன் மீது தார்சாலை போடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கனமழை காரணமாக அந்த ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிக அளவு தண்ணீர் வந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டு வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
இதனால் அந்த சாலையே துண்டானது. இதை அறியாமல் அந்த பகுதி யை சேர்ந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் ஓடை பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார்.
அப்போது தண்ணீர் குறைவாக சென்றதால் அந்த வழியாக மேலே ஏறி உயிர் தப்பினார்.
கணவன்- மனைவி தப்பினர்
இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் காரில் வந்தார். அப்போது அவர் ரோடு துண்டாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காரை நிறுத்தினார்.
ஆனால் அதற்குள் காரின் முன்பக்க டயர் பள்ளத்தில் இறங்கி நின்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அவர்கள் கூச்சல் போட்டனர். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், காருக்குள் சிக்கிய தவித்த கணவன்- மனைவியை பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக் கப்பட்டு, ஓடைப்பள்ளத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட் டது. அது போல் காரும் மீட்கப்பட்டது. பள்ளத்தில் இறங்கியதால காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது.
மணியகாரம்பாளையம்- ஜெம் கார்டன் செல்லும் தார்சாலை துண்டானதால் போக்குவரத்து தடைபட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.