கோதவாடி குளத்திற்கு தண்ணீர் கொண்டு சென்ற விவசாயிகள்
கோதவாடி குளத்திற்கு தண்ணீர் கொண்டு சென்ற விவசாயிகள்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே வாய்க்கால் அமைத்து கோதவாடி குளத்திற்கு விவசாயிகள் தண்ணீர் கொண்டு சென்றனர்.
கோதவாடி குளம்
கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளம் உள்ளது. கோதவாடிகுளம் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வ அமைப்புகள் விவசாயிகள், பொதுமக்கள் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இணைந்து குளத்தில் முட்புதர்களை அகற்றவும், குளத்தில் கரைகளையும் பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தற்போது மழை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் கோதவாடி குளத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராம மக்கள் மழை காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை கோதவாடி குளத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் பி.ஏ.பி. அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தனர்.
வாய்க்கால் அமைப்பு
கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோதவாடி குளத்தின் அருகிலுள்ள தோட்டங்களில் மழை நீர் ஊற்று எடுத்து வருகிறது. கோதவாடி குளம் அருகே இருக்கும் விவசாயிகள் நிலத்தில் இருந்து ஊற்று எடுத்து வரும் தண்ணீரை வாய்க்கால் ஏற்படுத்தி கோதவாடி குளத்திற்கு கொண்டு செல்லும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மழை காலங்களில் வரும் தண்ணீரை பெரியகுளமான கோதவாடி குளத்திற்கு திருப்பி விட்டால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். மேலும், விவசாயிகளின் கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்து விவசாய பணிகளும் அதிகரிக்கும். தற்போது கிணத்துக்கடவு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் முதல்கட்டமாக இந்த தண்ணீரை குளத்திற்கு வாய்க்கால் அமைத்து கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.