வீட்டுமனை பட்டா கேட்டு படையெடுத்த மக்கள்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் குவிந்தனர்.

Update: 2021-11-08 14:18 GMT
திண்டுக்கல்:

குறைதீர்க்கும் கூட்டம் 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் விசாகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்து மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கருப்பையா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 

அந்த மனுவில், ரெட்டியார்சத்திரம் பகுதியில் விதவைகள், கூலி தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் வசிக்க வீடு இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அதில் வீடு கட்டித்தர வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

வீட்டுமனை பட்டா 

இதேபோல் நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டியை சேர்ந்த 40 பேர் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகிறோம். இதனால் சொந்தமாக வீடு இல்லாமல் தவிக்கிறோம். மேலும் ஒரே வீட்டில் 3 குடும்பங்கள் வசிக்கும் நிலை உள்ளது. எனவே எங்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என்றனர்.

மேலும் நிலக்கோட்டை தாலுகா கட்டகாமன்பட்டியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கொடுத்த மனுவில், பூமி தானம் திட்டத்தில் எங்களுக்கு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து உள்ளனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தரவேண்டும், என்று கூறியிருந்தனர்.

நாட்டுப்புற கலைஞர்கள்

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட அனைத்து நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்பையா தலைமையிலான நிர்வாகிகள் மனு கொடுத்தனர். 

அதில் தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டுப்புற கலைஞர்களை ஈடுபடுத்த வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்