வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று வலியுறுத்தி சமூக நீதி கூட்டமைப்பினர் புறாக்களை பறக்கவிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று வலியுறுத்தி சமூக நீதி கூட்டமைப்பினர் புறாக்களை பறக்கவிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்

Update: 2021-11-08 13:08 GMT
தூத்துக்குடி:
வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று வலியுறுத்தி சமூக நீதி கூட்டமைப்பினர் புறாக்களை பறக்கவிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
உரம் விற்பனை தொடர்பான புகார்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரிடர் காலத்தில் முதல்நிலை பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கையேட்டையும், உரம் விற்பனை தொடர்பான புகார்களுக்கான தொலைபேசி எண்கள் விவரம் அடங்கிய ஸ்டிக்கரையும் கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
நடவடிக்கை
எட்டயபுரம் தாலுகா வெம்பூர் கிராம மக்கள், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், வெம்பூர் கிராமத்தில் ஆண்டாள் நகர் மற்றும் வடக்குத் தெருவில் வாறுகால் அமைப்பதாக கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் தோண்டப்பட்டது. ஆனால், இதுவரை வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்ல முடியவில்லை. மேலும், தெருவில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தோண்டிய கால்வாயில் தற்போது மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, விரைவாக வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
புறாவை பறக்கவிட்டு..
146 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் மற்றும் 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள், சீர்மரபினர் ஆகிய சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சமூகநீதியை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி புறாக்களை பறக்கவிட்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சமுதாயதத்துக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை தீர்ப்பளித்து உள்ளது. தமிழகத்தின் சமூகநீதியை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது. மேலும், 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடியாக புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தின் கீழ் சமூகங்களின் மக்கள் தொகை, கல்வி, சமூக நிலை மற்றும் அரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவம் போன்ற புள்ளி விவரங்களை சேகரித்து சமூகநீதியை பாதுகாக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்புகளில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கருணை கொலை
கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த இந்திரா (50) என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது தந்தை எஸ்.மாடசாமி என்ற எஸ்.எம்.சாமி சுதந்திர போராட்ட தியாகிக்கான ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர் கடந்த 2002-ல் காலமானார். அதன் பிறகு எனது தாய் வள்ளியம்மாள் ஓய்வூதியம் பெற்று வந்தார். அவரும் 2013-ல் இறந்துவிட்டார். நான் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறேன். எனக்கு எந்த வருமானமும் கிடையாது. ஓட்டலில் பாத்திரம் கழுவி பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது தந்தைக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை எனக்கு வழங்கக் கோரி கடந்த 9 ஆண்டுகளாக போராடி வருகிறேன். மதுரை ஐகோர்ட்டு கிளை எனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியும், இதுவரை ஓய்வூதியம் வழங்கவில்லை. எனக்கு விரைவில் ஓய்வூதியம் கிடைக்க செய்ய வேண்டும். இல்லையென்றால், நாட்டின் குடியரசு தினத்தன்று என்னை கருணை கொலை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்