தி.மு.க. பிரமுகர் மீது இரும்பு குழாயால் தாக்குதல்
மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் தி.மு.க. பிரமுகர் மீது இரும்பு குழாயால் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சென்னையை அடுத்த அய்யப்பன்தாங்கல், தெள்ளியார் அகரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). தி.மு.க.வில் ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார். மேலும் இவர், ஒப்பந்த முறையில் கட்டிடங்கள் கட்டி தருவது மற்றும் சாலை அமைத்து கொடுக்கும் பணிகளையும் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவரது பிள்ளைக்கு பிறந்தநாள் என்பதால் இரவு வீட்டில் கேக் வெட்டுவதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் குமாரை வழிமறித்து கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குமார், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். குமாரை தாக்கிய மர்ம நபர்கள் யார்? எதற்காக தாக்கினார்கள்?. தொழில் போட்டியா? அல்லது முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.