நங்கநல்லூரில் சாலையில் ராட்சத பள்ளம்; போக்குவரத்து துண்டிப்பு

நங்கநல்லூர் 100 அடி சாலை சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் அதிகளவில் நீர் ஓடியதால் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சாலையின் நடுவே சுமார் 10 அடி அகலத்துக்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டது.

Update: 2021-11-08 08:51 GMT
பலத்த மழையின் காரணமாக சென்னையை அடுத்த நங்கநல்லூர் 100 அடி சாலை, 46-வது தெரு வழியாக மழைநீர் வீராங்கல் ஓடைக்கு வழிந்து ஓடியது. அப்போது 100 அடி சாலை சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் அதிகளவில் நீர் ஓடியதால் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சாலையின் நடுவே சுமார் 10 அடி அகலத்துக்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டது.

மேலும் அந்த பள்ளத்தை மறைத்தபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதில் தவறி விழும் நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள், சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தை சுற்றி 4 பக்கமும் தடுப்புகள் அமைத்து அந்த பகுதியில் போக்குவரத்தை துண்டித்தனர். பின்னர் பள்ளத்தில் தேங்கிய மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மழை நின்ற பின்னர்தான் அந்த பள்ளத்தை சீரமைக்க முடியும். அதுவரை பாதாள சாக்கடை கழிவுநீரை மாற்று வழியில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்