பாரடைஸ் பீச்சுக்கு செல்லத்தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சுண்ணாம்பாற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் பாரடைஸ் பீச்சுக்கு செல்ல திடீர் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
அரியாங்குப்பம், நவ.
சுண்ணாம்பாற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் பாரடைஸ் பீச்சுக்கு செல்ல திடீர் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
படகு குழாம்
புதுவையில் உள்ள சுற்றுலா தலங்களில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு சவாரி மற்றும் பாரடைஸ் பீச் முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையின்போது உள்ளூர்வாசிகள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிவார்கள். தற்போது தீவாபளி பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சங்கராபரணி மற்றும் சுண்ணாம்பாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாரடைஸ் பீச்சுக்கு செல்ல தடை
புதுவைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் நேற்று பாரடைஸ் பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல திடீரென்று தடை விதிக்கப்பட்டது.
கன மழை எச்சரிக்கை காரணமாக நோணாங்குப்பம் படகு குழாமுக்கு குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் படகு குழாமில் இருந்து படகுகள் மூலம் சுண்ணாம்பாற்றில் பாரடைஸ் பீச் வரை அழைத்துச்செல்லப்பட்டனர். ஆனால் அங்கு இறக்கப்படவில்லை. படகில் இருந்தபடியே மீண்டும் படகு குழாமுக்கு வந்து இறக்கி விடப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.