காட்டுக்காநல்லூர் கிராமத்தில் தெரு விளக்குகள் எரியாததால் தீப்பந்தம் ஏற்றிய பொதுமக்கள்
தெரு விளக்குகள் எரியாததால் தீப்பந்தம் ஏற்றிய பொதுமக்கள்
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காட்டுக்காநல்லூர் கிராமம் உள்ளது. இங்குள்ள பிள்ளையார் கோவில் தெரு, குளத்து மேட்டு தெரு, கொண்டை அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர் மூலம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் இரவில் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் விஷஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள், குழந்தைகள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து ஊராட்சியை கண்டித்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதி மக்கள் எரியாத மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினர்.
இதன் எதிரொலியாக நேற்று காலை ஊராட்சி சார்பில் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்றது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.