வாலிபர் கொலையில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:
வாலிபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கைது
பாளையங்கோட்டை சங்கர் காலனி செண்பகம் நகரை சேர்ந்தவர் மக்தூம் மகன் அப்துல் காதர் (வயது 27). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கும்பல் அப்துல் காதரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இதில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பொன் பாண்டி (40), மணிகண்டன் (30), சியாம் என்ற சாம் சுதர்சன் வினோ (22), பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த மணிகண்டன் என்ற மணி (30), நாங்குநேரி அருகே உள்ள மாவடியை சேர்ந்த தங்கபாண்டி (25), பாளையங்கோட்டை ரகுமத் நகர் 29-வது குறுக்கு தெருவை சேர்ந்த சங்கர் (37) ஆகிய 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக் கண்ணனுக்கு, சட்டம்- ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், பாளையங்கோட்டை சரக உதவி போலீஸ் கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார், பொன் பாண்டி உள்ளிட்ட 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை, பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.