நீர்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியை நெருங்கியது; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியை நெருங்கியது. இதனால் கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Update: 2021-11-07 21:18 GMT
பவானிசாகர்
நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியை நெருங்கியது. இதனால் கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. 
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. 
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
தற்போது பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 
நேற்று மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 25 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 103.86 அடியாக இருந்தது..
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி உபரி நீரும் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கிவிட்டதால் அணைக்கு வரும் நீர்வரத்தை அணைப்பிரிவு உதவி பொறியாளர் பாலாஜி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதற்காக அவர் அணை மேல் பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
இதைத்தொடர்ந்து பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களை சத்தியமங்கலம் தாசில்தார் ரவிக்குமார் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும் செய்திகள்