தாளவாடி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை; முகமூடி கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தாளவாடி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-11-07 21:01 GMT
தாளவாடி
தாளவாடி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கணவன்-மனைவி
தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் தோட்டத்துசாலை பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது80). விவசாயி. இவருக்கு சொந்தமாக 10 ஏக்கர் தோட்டம் உள்ளது. அவருடைய மனைவி சத்தியா. மகன், மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் சண்முகமும், சத்தியாவும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு சண்முகமும், சத்தியாவும் வீட்டு கதவை சற்று திறந்து வைத்தபடி உள்ளே தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு் சண்முகமும், சத்தியாவும் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தனர். மர்மநபர்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், “திருடன் திருடன்” என்று சத்தம் போட்டனர்.
நகை-பணம் கொள்ளை
இதனால் மர்மநபர்கள் அவர்களிடம் கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். மேலும் சத்தம் போடாமலிருக்க 2 பேரின் வாயிலும் துணியை வைத்து அடைத்து கைகளை கயிற்றால் கட்டினார்கள். அதைத்தொடர்ந்து மர்மநபர்கள் பீரோ இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே திறந்திருந்த பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 4½ பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
கொள்ளையர்கள் சென்ற சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு கணவனும், மனைவியும் தாங்களாகவே கட்டு்களை அவிழ்த்தனர். பின்னர் நேற்று காலை இதுபற்றி தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
வலைவீச்சு
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவான கைரேகையை பதிவு செய்துவிட்டு சென்றனர். மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு் அது வீட்டில் இருந்து தோட்டம் வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.  
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்