பிரதமர் மோடிக்கு தேவேகவுடா பாராட்டு

கேதார்நாத்தை மேம்படுத்த உறுதி பூண்டுள்ள பிரதமர் மோடிக்கு தேவேகவுடா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-07 20:56 GMT
பெங்களூரு:

ஆதிசங்கராச்சாரியார் சிலை

  பிரதமர் மோடி, சமீபத்தில் கேதார்நாத் கோவிலுக்கு சென்று அங்கு நிறுவப்பட்ட ஆதிசங்கராச்சாரியார் சிலையை திறந்து வைத்தார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

  கருப்பு கல்லால் உருவாக்கப்பட்ட ஆதி சங்கராச்சாரியார் சிலை உங்களால் (பிரதமர் மோடி) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உருவாக்கப்பட்ட கருப்பு கல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் இருந்து அனுப்பப்பட்டது. மேலும் அந்த சிலையை மைசூருவை சேர்ந்த சிற்பி யோகிராஜ் செதுக்கினார். அதனால் அந்த சிலைக்கும், கர்நாடகத்திற்கும் தொடர்பு உள்ளது. இது எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது.

ஆன்மிக ஆலோசனைகள்

  கேதார்நாத் புனித தலத்தை மேம்படுத்த தாங்கள் பூண்டுள்ள உறுதியை நான் பாராட்டுகிறேன். நான் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடத்தின் தீவிரமான பக்தன். இது ஆதி சங்கராச்சாரியரால் அமைக்கப்பட்ட 4 மடங்களில் ஒன்று.

  சிருங்கேரி சாரதா மடம், பல்வேறு மன்னர்கள் மற்றும் ஆட்சி செய்தவர்களுக்கு ஆன்மிக ஆலோசனைகளை கூறி வந்துள்ளது. உடையார், பெஸ்வாஸ், கெலடிஸ், திருவாங்கூர் மன்னர்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், ஐதராபாத் நிஜாம் ஆகியோர் அந்த மடத்தில் இருந்து ஆன்மிக ஆலோசனை பெற்றுள்ளனர். அந்த மடத்தின் இந்த புகழ் பெற்ற பாரம்பரியம் இப்போது வரை தொடர்ந்து வருகிறது. சிருங்கேரி மடம், தனிப்பட்ட முறையில் எனக்கு அனைத்து மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது.
  இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்