2 வீடுகளின் மண் சுவர் இடிந்து விழுந்தது; தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

கரூரில் பெய்த பலத்த மழையின் காரணமாக 2 வீடுகளின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில், தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2021-11-07 18:49 GMT
குளித்தலை, 
பலத்த மழை
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டும், லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழை நேற்று அதிகாலை வரை பெய்தது. இதில் அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 72 மி.மீட்டரும், குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரத்தில் தலா 70 மி.மீ., மாயனூரில் 54 மி.மீ., கரூரில் 51 மி.மீ. மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. பின்னர் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கியது. சில இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது. செட்டிப்பாளையம் கதவணையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.
2 வீடுகள் இடிந்தன
குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூர் பகுதியில் வசிக்கும் நல்லுசாமி (வயது 61) என்பவரின் கூரை வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு நல்லுசாமிக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
லாலாபேட்டையை அடுத்த பிள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மல்லன் கோவில் அருகே வசித்து வருபவர் மூர்த்தி (45), கூலித்தொழிலாளி. இவரது வீடு மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீடு ஆகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக மூர்த்தி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வீடு சேதம் அடைந்த மூர்த்திக்கு நிவாரண தொகை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து உள்ளனர்.
குளங்கள் நிரம்பின
தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் குளம் மற்றும் தடுப்பணைகள் நிறைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் பாதிரிப்பட்டி, பில்லூர், கல்லடை, கீழவெளியூர், வடசேரி, தோகைமலை ஆகிய குளங்கள் நிரம்பி வழிந்து உபரி நீர் வெளியேறியது. 20 ஆண்டுகளுக்கு பிறகு குளங்கள் நிறைந்ததை கண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தோகைமலையில் போதிய மழை பெய்யாததால் சம்பா சாகுபடி செய்யாத விவசாயிகளும் தற்போது சம்பா சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் வடசேரி குளத்தை பார்வையிட்டு மலர் தூவி வரவேற்றார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்