வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெயிண்டர் சாவு
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மொபட் மீது கார் மோதியதில் மேம்பாலத்திருந்து பெயின்டர் கீழே விழுந்து பலியானார்.
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மொபட் மீது கார் மோதியதில் மேம்பாலத்திருந்து பெயின்டர் கீழே விழுந்து பலியானார்.
பெயிண்டர் பலி
வேலூர் சத்துவாச்சாரி 4-ம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 35), பெயிண்டர். இவர் நேற்று காலை வேலூர் பஜாருக்கு வேலை நிமித்தமாக சென்று விட்டு மதியம் 1 மணியளவில் மொபட்டில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த கார் திடீரென மொபட்டின் பின்பகுதியில் மோதியது.
அதனால் கட்டுப்பாட்டை இழந்த மொபட் மேம்பால பக்கவாட்டு சுவரில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குமரன் கலெக்டர் அலுவலகம் செல்லும் அணுகுசாலையை ஒட்டியுள்ள மண்தரையில் அலறியபடி விழுந்தார். அதைத்தொடர்ந்து காரும் சுவர் மீது ் மோதியபடி நின்றது.
பலத்த காயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். விபத்துக்குள்ளான மொபட், காரும் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். அதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டிரைவரிடம் விசாரணை
தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சத்துவாச்சாரியை சேர்ந்த கார் டிரைவர் முஜித்திடம் (20) விசாரணை நடத்தி வருகிறார்கள்.