கழுத்தை அறுத்து சமையல் தொழிலாளி படுகொலை
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் கழுத்தை அறுத்து சமையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
சமையல் தொழிலாளி
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 38). இவர், திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக திருப்பூரில் இருந்து புறப்பட்ட அவர், நேற்று காலை 9.30 மணி அளவில் திண்டுக்கல் பஸ் நிலையம் வந்தார்.
பின்னர் நத்தம் வழியாக மேலூருக்கு செல்ல முடிவு செய்த அர்ஜூனன், நத்தம் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடைக்கு வந்தார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்க்கும் அவருடைய நண்பரிடம் இருந்து செலவுக்கு பணம் வாங்கினார்.
இதையடுத்து அவர், தன்னிடம் ஏற்கனவே உள்ள பணத்துடன் அதனையும் சேர்த்து வைத்துக்கொண்டு நத்தம் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படும் இடம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து சென்று வழிமறித்தார்.
கழுத்தை அறுத்து கொலை
பின்னர் அர்ஜூனனிடம் உள்ள பணத்தை கொடுக்கும்படி கேட்டார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அர்ஜூனனின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
கண்இமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பயணிகள் அந்த வாலிபரை விரட்டி பிடித்தனர். இதற்கிடையே அர்ஜூனனின் கழுத்து பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
ரத்தம் சொட்ட, சொட்ட பஸ் நிலைய வளாகத்தில் நடந்து சென்ற அவர், சிறிது தூரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட பயணிகள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடினர்.
ேஜப்படி
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கொைல செய்யப்பட்ட அர்ஜூனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பொதுமக்களும் தாங்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர், மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் அன்பரசன் (22) என்பதும், மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி பஸ் நிலையங்களில் பயணிகளிடம் ஜேப்படி, வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
பஸ்நிலையத்தில் பரபரப்பு
மேலும் அர்ஜூனனிடம் ஆயிரக்கணக்கில் பணம் இருப்பதை பார்த்த பிரான்சிஸ் அன்பரசன் அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோட முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரான்சிஸ் அன்பரசனை கைது செய்தனர். திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.