தூக்கி வீசியதில் மின்கம்பியில் தொங்கியபடி வாலிபர் பலி

நிலக்கோட்டை அருகே காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் மின்கம்பியில் தொங்கியபடி பலியானார். படுகாயம் அடைந்த நண்பரும் உயிரிழந்தார்.

Update: 2021-11-07 17:39 GMT
நிலக்கோட்டை: 


கொடைக்கானலுக்கு சுற்றுலா
மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியை சேர்ந்த வேதமாணிக்கம். அவருடைய மகன் காமு என்ற காமராஜ் (வயது 21). இவர், மதுரையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் அஜித் கண்ணன் (21). 
நண்பர்களான இவர்கள் 2 பேரும், தங்களது நண்பர்கள் 18 பேருடன் ேசர்ந்து 10 மோட்டார் சைக்கிள்களில் தலா 2 பேர் வீதம் கடந்த 5-ந்தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்து விட்டு, நேற்று காலையில் அவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் மதுரை நோக்கி புறப்பட்டனர்.

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஒரு டீக்கடையில் அவர்கள் டீ குடித்தனர். பின்னர் காமு, அஜித்கண்ணன் ஆகியோர் மட்டும் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை காமு ஓட்டினார். 
வத்தலக்குண்டு-நிலக்கோட்டை சாலையில், சிலுக்குவார்பட்டி சிவன்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள சாலை வளைவில் எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல நொறுங்கியது. காரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.

மின்கம்பியில் தொங்கியபடி பலி
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் சினிமாவை மிஞ்சும்  காட்சியை போல் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 ேபரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து வந்த அஜித்கண்ணன் சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பி மீது பறந்து போய் விழுந்தார். 
மின்கம்பியில் தொங்கியபடி கிடந்த அஜித்கண்ணன் மீது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல் விபத்தில் சிக்கி, சாலையோரத்தில் போய் விழுந்த காமு படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். 
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த சக நண்பர்கள் விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடந்த அவர்களை பார்த்து கதறி அழுத சம்பவம் காண்போரின் கண்களை குளமாக்கியது. 

உடல்கள் மீட்பு
விபத்து குறித்து தகவலறிந்த நிலக்கோடடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
 அதன்பிறகு மின்சார கம்பியில் இறந்து தொங்கி கொண்டிருந்த அஜித் கண்ணன் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். அவர்கள் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய 2 வாலிபர்களும் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்