தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-07 17:38 GMT
நடைபாதை ஆக்கிரமிப்பு

கூடலூர் நகரில் சாலையின் இருபுறமும் நகராட்சி சார்பில் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையை வணிக நிறுவனங்களின் விற்பனை பொருட்கள் வைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடைபாதையை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

தமிழ், கூடலூர்.

சாலை சீரமைக்கப்படுமா?

பாலக்காடு ரோட்டில் இருந்து குளத்துபாளையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்த வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். 

மேலும் குண்டும், குழியுமான சாலையில் தொடர்ந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நந்தகுமார், கோவைப்புதூர்.

போக்குவரத்து நெரிசல்

கோத்தகிரியில் ராம்சந்த் சதுக்கம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருவதுடன், பயணிகள் பஸ்சில் ஏறி, இறங்கவும் சிரமமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சப்னா சுரேஷ், கோத்தகிரி.

பாராக மாறிய குளக்கரை

கோவை குறிச்சி குளக்கரையில் மாலை நேரத்தில் மது பிரியர்கள் அமர்ந்து மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

 இதனால் அந்த பகுதியில் நடைபயிற்சி செல்லும் செல்லும் சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் கால்களை கண்ணாடி துண்டுகள் பதம்பார்த்து வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜெயபிரகாஷ், பூங்காநகர்.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
ரெயில்வே பாலம் சீரமைப்பு

பொள்ளாச்சி மீன்கரை ரோடு சீனிவாசபுரம் ரெயில்வே கீழ்மட்ட பாலத்தில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் பெயர்ந்து கம்பிகள் வெளியே நின்றுகொண்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது.

 இதையடுத்து சேதமடைந்த பகுதிகளில் கான்கிரீட் கலவை கொண்டு அதிகாரிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஞ்சித், ஜமீன் ஊத்துக்குளி.

விபத்து ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சாலை மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். 

மேலும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்கடேஷ், பொள்ளாச்சி.

சேறும், சகதியுமான சாலை

நெகமம் அருகே உள்ள தேவணாம்பாளையத்தில் இருந்து வகுத்தபாளையம் செல்லும் ரோடு குண்டும், குழியுமாக இருக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது.

 இதனால் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனகராஜ், தேவணாம்பாளையம்.

ஓடையில் கலக்கும் கழிவுகள்

கோவை சித்தாபுதூரை அடுத்த புதியவர் நகரில் சங்கனூர் ஓடையின் ஓரம் பட்டாசு உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த கழிவுகள், தொடர் மழையின் காரணமாக ஓடையின் நீரில் அடித்து செல்லப்படுகின்றன.

 இதனால் ஓடையில் அடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஓடையின் ஓரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றி, ஓடையை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேஷ், புதியவர் நகர்.

மேலும் செய்திகள்