திருவெண்ணெய்நல்லூர் அருகே ரெயிலில் அடிபட்டு 2 வயது குழந்தை சாவு தாயை தேடிச்சென்றபோது பலியான சோகம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தாயை தேடி வீட்டைவிட்டு வெளயே வந்த 2 வயது குழந்தை ரெயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
அரசூர்,
விழுப்புரத்தை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி கங்கா. இவர்களுக்கு சாதனா(வயது 8), அனுப்பிரியா(2) என்ற 2 மகள்கள் இருந்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி, கங்கா தனது குழந்தைகளுடன் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆத்திப்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
டீ வாங்க சென்ற தாய்
இந்த நிலையில், நேற்று கங்கா அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு டீ வாங்கி வருவதற்காக சென்றிருந்தார். வழக்க மாக, இவரது வீட்டை ஒட்டி அமைந்துள்ள ராகவன் வாய்க்கால் வழியாக தான் செல்வார்.
ஆனால், தற்போது பெய்யும் மழையால், வாய்க்காலில் தண்ணீர் செல்வதால் அதன் வழியாக செல்ல முடியவில்லை. எனவே வீட்டுக்கு அருகே செல்லும் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து கடைகளுக்கு சென்று வந்தனர். அதன்படி, கங்காவும் டீ வாங்க ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றார்.
ரெயில் மோதியது
சிறிது நேரம் ஆகியும் அவர் அங்கு வரவில்லை. இதனால் இரு குழந்தைகளும் தாயை தேட தொடங்கினர். சாதனா தனது தாயை தேடி வீட்டு முன்பு உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றாள்.
அப்போது அவளை பின் தொடர்ந்து குழந்தை அனுப்பிரியாவும் நடந்து சென்றாள். மழலை நடைகூட மாறாத அந்த குழந்தை, அக்கா நடந்து சென்ற அதே பாதையில் ரெயில்வே தண்டவாளத்தின் அருகே நடந்து சென்றது. அந்த சமயத்தில் அந்த வழியாக சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது.
குழந்தை அனுப்பிரியா தண்டவாளத்தையொட்டி நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அதில் ரெயில் என்ஜினின் பக்கவாட்டு பகுதி குழந்தை மீது மோதியதில், தூக்கி வீசப்பட்டாள்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். இதையறிந்த கங்கா அலறி துடித்தபடி அங்கு ஓடிவந்தார். பிணமாக கிடந்த குழந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.
சோகம்
இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த விருத்தாசலம் இருப்பு பாதை போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன், தனிப்பிரிவு ஏட்டு ராம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.