தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்ததால் பஸ் நிலையங் களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்ததால் பஸ் நிலையங் களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது

Update: 2021-11-07 17:00 GMT
ஊட்டி

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்ததால் பஸ் நிலையங் களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூடலூரில் போக்குவரத்து நெரிசலால்  வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

பயணிகள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரி மேற்படிப்பு தங்கி படித்து வருகின்றனர். பிற மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவர்கள் நீலகிரியில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர்.

4 நாட்கள் தொடர் விடுமுறையில் தங்களது குடும்பத்தினருடன் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.

இதைதொடர்ந்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு பணிகளில் ஈடுபடுவோர் அரசு பஸ்களில் திரும்பினர். அதன் காரணமாக ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று மதியத்திற்கு மேல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

வெளியிடங்களுக்கு சென்ற அரசு பஸ்கள் போக்குவரத்து பாதிப்பு காரணமாக உரிய நேரத்துக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்தது. தொடர்ந்து கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

5 ஆயிரம் பேர் பயணம்

கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் தங்கி பணிபுரிந்து வருகிறவர்கள் தொடர் விடுமுறையை ஊட்டியில் கழித்துவிட்டு அரசு பஸ்களில் உடமைகளுடன் திரும்பியதை காண முடிந்தது.

 தீபாவளியை ஒட்டி நீலகிரியில் இருந்து கடந்த 3-ந் தேதி முதல் 45 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பலர் இருக்கை கிடைக்காமல் நின்றபடி பயணம் செய்தனர். 

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், துறையூர், திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு 45 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்பட்ட 45 சிறப்பு பஸ்களில் 5,000 பேர் பயணம் செய்து உள்ளனர். இன்றும் (திங்கட்கிழமை) சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்றனர்.

கூடலூர் பஸ் நிலையம்

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், குன்னூர் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூடலூர் பஸ் நிலையத்தில் காலை முதல் மாலை வரை பயணிகள் வெளியூர்களுக்கு செல்வதற்காக அதிகளவு வந்திருந்தனர். 

இதேபோல் சுற்றுவட்டார கிராம புறங்களில் உள்ள பொதுமக்களும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கூடலூர் நகருக்கு வந்தனர்.

போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பு

இதன் காரணமாக கூடலூரில் இருந்து மைசூரு, கோழிக்கோடு, சுல்தான் பத்தேரி, ஊட்டி ஆகிய சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். 

இதேபோல் பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடலூரில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் குடும்பத்தினருடன் வெகுநேரம் காத்து நின்று புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்