புதுச்சேரியில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு
தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் 1, 3, 5, 7-ம் வகுப்புகளும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் 2, 4, 6, 8-ம் வகுப்புகளும் இயங்கும் என்றும், இந்த வகுப்புகளும் அரைநாள் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக புதுச்சேரியில் (நவம்பர் 8, 9) திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் அறிவித்துள்ளார். பள்ளிகளை திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.