வெண்ணந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பசு செத்தது காப்பாற்ற முயன்ற விவசாயியும் இறந்த பரிதாபம்
வெண்ணந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பசு செத்தது காப்பாற்ற முயன்ற விவசாயியும் இறந்த பரிதாபம்
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு செத்தது. அதனை காப்பாற்ற முயன்ற விவசாயியும் பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே செம்மாண்டப்பட்டி ஊராட்சி காணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 70). விவசாயி. இவருடைய மனைவி ராசம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் சீரங்கனை நேற்று முன்தினம் முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள காவேரி என்பவரின் விவசாய கிணற்றில் ஒரு பசு மாடு செத்து மிதப்பதாக தகவல் பரவியது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ஏழுமலை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
செருப்பு மிதந்தது
மொத்தம் 50 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதையடுத்து கயிற்றை கட்டி கிணற்றில் செத்து மிதந்த பசு மாட்டின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது கிணற்றின் ஒரு பகுதியில் செருப்பு மிதந்தது. இதையடுத்து இறந்த மாடு காணாமல் போன சீரங்கனுக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து செருப்பு மிதந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தொடர்ந்து தேடியபோது விவசாயி சீரங்கனை பிணமாக மேலே கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த சீரங்கனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
மேலும் இந்த சம்பவம் குறித்து ராசம்மாள் கொடுத்த புகாரின்பேரில் வெண்ணந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிணற்றுக்கு அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது பசு தவறி கிணற்றுக்குள் விழுந்து அதனை காப்பாற்ற முயன்ற சீரங்கன் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.