பரமத்தி முகாமில் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு
பரமத்தி முகாமில் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு
பரமத்திவேலூர்:
பரமத்தி பேரூராட்சி சமுதாய கூட முகாமில் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவ பரிசோதனை
பரமத்தி காந்திநகர், இடும்பன்குளம் பகுதியில் உள்ள 12 வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த பகுதியை சேர்ந்த 34 பேர் பரமத்தியில் உள்ள பேரூராட்சி சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுகாதார துறை சார்பில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் முகாம் அமைந்துள்ள பேரூராட்சி சமுதாய கூடத்துக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து இடும்பன்குளம், மறவாபாளையம் பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தரைமட்ட பாலம்
மேலும் திருமணிமுத்தாறு ஆற்றின் வழியில் பிள்ளைகளத்தூர், பில்லூர், கூடச்சேரி, ராமதேவம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலங்களை நேரில் பார்வையிட்டு தடையின்றி தண்ணீர் செல்வதை ஆய்வு செய்தார். மேலும் ஆற்றில் அடித்து வரப்படும் செடி, கொடிகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து ராமதேவம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தில் தண்ணீர் கடந்து செல்வதை பார்வையிட்டு, தண்ணீர் அதிகமாக செல்லும்போது, போக்குவரத்தை தடைசெய்து மாற்று வழியில் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். செருக்கலை ஏரியில் நீர் நிரம்பி பாதுகாப்பாக வெளியேறி வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.