கோவையை சேர்ந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி
கோவையை சேர்ந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி
கோவை
வீட்டில் இருந்தபடி வருமானம் ஈட்டலாம் என்று தகவல் அனுப்பி ஆன்லைன் மூலம் கோவையை சேர்ந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் மோசடி
கோவை நகரில் ஆன்லைன் மூலம் மோசடி நடைபெறுவது அதிகரித்து உள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய குறியீடு எண்ணை பெற்று மோசடி, போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் வசூலிப்பது என்று மோசடிகள் அரங்கேறுகின்றன.
கொரோனா பரவலுக்கு பின்னர் வீட்டில் இருந்து வேலை செய்வது அதிகரித்து வருகிறது. அதை பயன்படுத்தியும் மோசடி நடைபெறுகிறது.இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது
வீட்டில் இருந்தபடி வருமானம்
பகுதிேநர வேலையாக வீட்டில் இருந்தபடி வருமானம் ஈட்டலாம் என்ற தகவலுடன் வாட்ஸ்அப் மூலம் ஒரு லிங்க் முகவரி அனுப்பப்படுகிறது.
அதில், பிரபல தனியார் நிறுவனங்க ளில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் வீட்டில் இருந்தபடியே தினமும் ரூ.900 வருமானம் ஈட்டலாம் என்று அறிவிக்கிறார்கள்.
அதை நம்பி, அந்த லிங்கை ஓபன் செய்து பதிவு செய்து, முதலில் ரூ.200 செலுத்தி னால் ரூ.350 கொடுக்கிறார்கள். அதைத்தொடர்ந்து ரூ.1000 செலுத்தினால் ரூ.2 ஆயிரம் தருவார்கள்.
அந்த ஆசையில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்த கோவையை சேர்ந்த பலரும் லட்சக்கணக்கான பணத்தை இழந்து தவிக்கிறார்கள்.
பொதுமக்கள் உஷார்
இது போன்ற மோசடியில் சிக்கி பணத்தை இழந்த பலர் கோவை நகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கின்றனர்.
பெண்களிடம், அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதில் முதலீடு செய்யலாம் என்றும், ரெடிமேடு ஆடைகள், செல்போன் விற்பனை செய்யலாம் என்று ஆண்களுக்கும் லிங்க் அனுப்பி மோசடி செய்யப்படுகிறது.
எனவே ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்காமல் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு சைபர்கிரைம் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.