பூண்டி ஏரியில் அமைச்சர் ஆய்வு

பூண்டி ஏரியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-11-07 11:22 GMT
பூண்டி ஏரி

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்ம பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை நீர்மட்டம் 33.98 அடியாக பதிவானது. 2.817 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 729 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 482 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அமைச்சர் ஆய்வு

சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 14 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பூண்டி ஏரியில் நீர் இருப்பு நிலை குறித்தும், மதகுகளின் உறுதி தன்மை குறித்தும் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, திருவள்ளூர் வருவாய் ஆர்.டி.ஓ. ரமேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி கோட்ட பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் ரமேஷ், தாசில்தார்கள் செந்தில்குமார், ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமன், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், ஜெ.மூர்த்தி, பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்