அம்மாபேட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை; காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம்
அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.
அடிக்கடி தகராறு
அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி செல்லக்கிளி (வயது 26). 4 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு கிஷ்னேஸ்வரன் என்ற 2½ வயது ஆண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது கணவரை பயமுறுத்துவதற்காக ஸ்டவ் அடுப்பில் இருந்த மண்எண்ணெயை எடுத்து செல்லக்கிளி உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடனே தீ உடல் முழுவதும் பரவியது.
இருவரும் படுகாயம்
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் போர்வையை எடுத்து போட்டு செல்லக்கிளி மீது பற்றிய தீயை அணைக்க முயன்றார். அப்போது அவரும் படுகாயம் அடைந்தார். இதனால் இருவரும் அலறி துடித்தார்கள்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக செல்லக்கிளி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று முன்தினம் செல்லக்கிளி இறந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆறுமுகத்துக்கும், செல்லக்கிளிக்கும் திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியும் விசாரணை நடத்த உள்ளார்.