தென்காசியில் புரோட்டா மாஸ்டர் மர்ம சாவு

புரோட்டா மாஸ்டர் மர்ம சாவு

Update: 2021-11-06 22:42 GMT
தென்காசி:
தென்காசி பாறையடி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபிக். இவருடைய மகன் செய்யது சுலைமான் (வயது 36). இவர் சவுதி அரேபியாவில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். செய்யது சுலைமான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இவர் நேற்று முன்தினம் இரவில் மதுபோதையில் வீட்டுக்கு சென்று, மொட்டை மாடியில் தூங்கினார். இந்த நிலையில் நேற்று காலையில் செய்யது சுலைமான் காதில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், தென்காசி போலீசார் விரைந்து சென்று, இறந்த செய்யது சுலைமானின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செய்யது சுலைமான் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே செய்யது சுலைமான் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்