பாக்கு திருடியதாக சிறுவன் மீது கொடூர தாக்குதல்; 10 பேருக்கு வலைவீச்சு

சுள்ளியா அருகே தோட்டத்தில் பாக்கு திருடியதாக சிறுவனை கொடூரமாக தாக்கிய 10 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2021-11-06 21:31 GMT
மங்களூரு: சுள்ளியா அருகே தோட்டத்தில் பாக்கு திருடியதாக சிறுவனை கொடூரமாக தாக்கிய 10 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

 தோட்டத்தில் பாக்கு திருடியதாக...

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா குத்திகார் கிராமம் கடந்தலஜே பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இதற்கிடையே அதேபகுதியை சேர்ந்த ஈஸ்வரா என்பவருக்கு சொந்தமான பாக்குத்தோட்டம் உள்ளது. ஈஸ்வராவின் தோட்டத்தில் சமீப காலமாக பாக்கு திருடு போய் வந்தது. 

இதுபற்றி ஈஸ்வரா, அப்பகுதியை சேர்ந்த 10 பேர் கொண்ட இளைஞர்களிடம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம்(அக்டோபர்) 27-ந்தேதி மாலை சிறுவன்  25 கிலோ பாக்கை கடை வீதிக்கு கொண்டு வந்து விற்க எடுத்து சென்றுள்ளான். இதனை, 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு பார்த்துள்ளனர். அவர்கள், சிறுவனை ஈஸ்வரா தோட்டத்தில் திருடிய பாக்குகளை விற்க எடுத்துச் செல்வதாக நினைத்துள்ளனர். 

சிறுவன் மீது கொடூர தாக்குதல்

இதுபற்றி அவர்கள், சிறுவனை வழிமறித்து கேட்டுள்ளனர். சிறுவன் திருட்டு பாக்கு இல்லை என்று தெரிவித்துள்ளான். ஆனாலும் அதை நம்பாத அவர்கள், பாக்கை திருடியதோடு பொய் சொல்கிறாயா என்று கூறி சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறி துடித்தான். 

மேலும் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும், போலீசில் புகார் கொடுத்தால் கொன்றுவிடுவோம் என்று சிறுவனை மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இதற்கிடையே சிறுவன் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது சிறுவன் மீது தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 வலைவீச்சு

இந்த வீடியோ தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிசிகேஷ் பகவான் சோனாவனே கவனத்திற்கு வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுப்ரமண்யா போலீசார் சிறுவனை தாக்கியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதில் தோட்டத்தில் பாக்கை திருடியதாக 16 வயது சிறுவனை, அதேபகுதியை சேர்ந்த ஜீவன், வர்ஷித், சச்சின், சனத், மோக்சித், முரளி, தினேஷ், ஈஸ்வரா,சந்திரா மற்றும் சேத்தன் ஆகிய 10 பேர் கொடூரமாக தாக்கியது தெரியவந்தது. இவர்கள் 10 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்