தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த பனங்குடி வடக்குதெரு பகுதியில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் மாணவ-மாணவிகள், வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு பனங்குடி வடக்குதெரு பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்னேஷ், பனங்குடி.
சிமெண்டு சாலை வேண்டும்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த அக்கிரஹாரம் புராண தெருவில் சாலை வசதி இல்லை. மேலும், அந்த பகுதியில் உள்ள மண் சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். மேலும், சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி விடுவதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், நீடாமங்கலம்.
சுகாதார சீர்கேடு
நாகை சவேரியார் கோவில் தெரு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுகுவிந்து கிடக்கின்றன. குவிந்து கிடக்கும் குப்பைகளை தேடி நாய்கள், பன்றிகள், கால்நடைகள் அதிகளவில் வருகின்றனர். மேலும், குப்பைகள் நீண்ட நாட்களாக தேங்கி கிடப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், கழிவுநீர் தேங்காமல் இருக்க வழிவகை செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவகுமார், நாகை.
முகத்துவாரத்தில் தூர்ந்து கிடக்கும் மண் அகற்றப்படுமா?
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு கள்ளிமேடு பகுதியில் உப்புநீர் விளைநிலங்களுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்காக தடுப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அணைக்கு கிழக்கே கடல் முகத்துவாரத்தில் மண் தூர்ந்து கிடக்கிறது. இதனால் கரியாப்பட்டிணம், செட்டிபுலம், 20 மகராசபுரம், கீழ்பாதி, 19 மகராசபுரம் மேல்பாதி, வடமழை, அண்டகத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் மழைநீர் வடிய வழியின்றி வயல்களில் குளம்போல் தேங்கி கிடக்கின்றன. மேலும், நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட கிராமங்களின் நலன் கருதி முகத்துவாரத்தில் தூர்ந்து கிடக்கும் மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், கள்ளிமேடு.
குடிநீர் வசதி வேண்டும்
நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த திருப்பூண்டி மேற்கு ஊராட்சி பகுதியில் 2500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் மூலம் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த குடிநீர் மாதத்துக்கு ஒரு முறை வழங்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கொண்டு வரும் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மாதத்துக்கு ஒரு முறை குடிநீர் கிடைப்பதால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், திருப்பூண்டி.