தொடர் மழையால் கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மீண்டும் மண்சரிவு
தொடர் மழையால் கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதைகளில் அவ்வப்போது மண்சரிவு ஏற்பட்டது. அதன்படி அடுக்கம் மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பெய்த மழையால் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்து ராஜன், கோட்ட பொறியாளர் மதன்குமார் மற்றும் அதிகாரிகள் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அடுக்கம் மலைப்பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளான கார் அனுமதியின்றி அந்த மலைப்பாதையில் சென்றுள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.
அடுக்கம் சாலையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால் மலைப்பாதை சீரமைப்பு பணிகள் முடியும் வரை அடுக்கம் மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிப்பது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட உள்ளது. மேலும் அனுமதியின்றி மலைப்பாதையில் வாகனங்களில் செல்பவர்களை தடுக்க பெருமாள் மலைப்பகுதியில் சோதனைச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.