டிக்-டாக் பிரபலம் சுகந்தி கைது
சமூக வலைதளங்களில் ஆபாசமான வார்த்தைகளால் சித்தரித்து பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் டிக்-டாக் பிரபலம் சுகந்தியை மதுரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
சமூக வலைதளங்களில் ஆபாசமான வார்த்தைகளால் சித்தரித்து பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் டிக்-டாக் பிரபலம் சுகந்தியை மதுரை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளம்
மதுரை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவுப்படி, மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும், சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த 13-ந்தேதி ஒத்தக்கடையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், தன்னுடைய கணவர் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஆபாசமான வார்த்தைகளால் சித்தரித்து பேசி வீடியோ வெளியிட்டதாக கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்மிங் எஸ். ஒய்ஸ்லின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
டிக்-டாக் பிரபலம் கைது
இந்த வழக்கில் தேனி மாவட்டம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் சுகந்திக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இதற்கிடையே, அவர், சென்னையில் மேக்கப் கலைஞராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் டிக்-டாக் சுகந்தியை கைது செய்தனர். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும், சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்கவும், சைபர் குற்றங்களால் பொது மக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அது குறித்து அச்சமின்றியும், தயக்கம் இன்றியும் போலீசாரை அணுகி புகார் அளிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்தார்.