கொடைக்கானல் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து தாய்-மகள் உள்பட 3 பேர் பலி

கொடைக்கானல் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து தாய்-மகள் உள்பட 3 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-11-06 19:05 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து தாய்-மகள் உள்பட 3 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர். 
கொடைக்கானலுக்கு சுற்றுலா
மதுரை மாவட்டம் சமயநல்லூர் தேனூர் ரோட்டை சேர்ந்தவர் கோகுல் (வயது 30). வக்கீல். அவருடைய மனைவி நந்தினி பாரதி (27). இந்த தம்பதிக்கு தனயாழினி (3) என்ற குழந்தை இருந்தது. கோகுல் தனது காரில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார். இவர்களுடன் கோகுலின் மாமியார் அழகுராணி (46). மைத்துனர் கார்த்திகேயன் (25). ஆகியோரும் கொடைக்கானலுக்கு வந்தனர்.கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை அனைவரும் பார்த்து ரசித்தனர். பின்னர் அவர்கள், அன்றைய தினம் இரவு 9 மணி அளவில் மாமியாரின் ஊரான தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரத்துக்கு புறப்பட்டனர். காரை கோகுல் ஓட்டினார். 
 மலைப்பாதையில் கவிழ்ந்த கார்
கொடைக்கானல்-அடுக்கம் மலைப்பாதையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் பனிப்பொழிவும் அதிகமாக இருந்தது. இதனால் மலைப்பாதையில் காரை ஓட்டுவது கோகுலுக்கு சற்று சிரமமாக இருந்தது. இந்தநிலையில் அடுக்கம் அருகே உள்ள கிழவிப்பாறை என்ற இடத்தில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அதனை கட்டுக்குள் கொண்டுவர கோகுல் போராடினார். 
ஆனால் அதற்குள் மலைப்பாதையில் இருந்து விலகிய கார், சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
3 பேர் பலி 
இந்த விபத்தில் காருக்குள் இருந்த நந்தினி பாரதி, அழகுராணி, தனயாழினி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். தாயின் அரவணைப்பில் தூங்கிக்கொண்டிருந்த அந்த குழந்தையின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. கோகுலும், கார்த்திகேயனும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.  இதற்கிடையே கார் பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை பார்த்த அக்கம்பக்கத்தினர், கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தீயணைப்பு படையினர் உதவியுடன் 200 அடி பள்ளத்தில் தவித்துக்கொண்டிருந்த கோகுலையும், கார்த்திகேயனையும் கயிறுகட்டி போலீசார் மேலே கொண்டு வந்தனர். இவர்களுக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
போலீசார் விசாரணை
மேலும் விபத்தில் பலியான நந்தினி பாரதி, அழகுராணி,  தனயாழினி ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பள்ளத்தில் கார் கவிழ்ந்து குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்