தொடர் விடுமுறை கிருஷ்ணகிரி அணையில் குவிந்த பொதுமக்கள்

தொடர் விடுமுறையையொட்டி கிருஷ்ணகிரி அணை அவதானப்பட்டி ஏரிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2021-11-06 18:33 GMT
கிருஷ்ணகிரி:
தொடர் விடுமுறையையொட்டி கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி ஏரிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
தீபாவளி பண்டிகை 
தீபாவளி பண்டிகை கடந்த, 4-ந் தேதி கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று மறுநாளும் அரசு விடுமுறை அறிவித்தது. தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 
அவர்கள் குடும்பத்துடன் வந்து கடைகளில் பொருட்கள் வாங்கி சென்றனர். இதே போல கிருஷ்ணகிரி நகரின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களான கிருஷ்ணகிரி அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் அணை, பூங்கா பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். கிராம பகுதிகளில் இருந்து குடும்பங்களுடன் வந்தவர்கள் அணைப்பகுதி பூங்காவில் தங்கள் குழந்தையுடன் நேரத்தை கழித்து மகிழ்ந்தனர்.
பொதுமக்கள் குவிந்தனர் 
கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிகமாக வெளியே வராமல் இருந்தனர்.
இந்த முறை கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி ஏரி பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். குழந்தைகள் பூங்காவில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்